தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த பலருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி, கீழவீரராகவபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.செங்கல்பட்டு, கழனிப்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தார். மதுராந்தகம், வடக்குபுத்தூரைச் சேர்ந்த தரணேஷ், ராஜா மற்றும் ஆகாஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை, பனப்பாக்கத்தைச் சேர்ந்த கோவர்தனன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
சோளிங்கர், புதூர் மதுரா மாலையமேடைச் சேர்ந்த அஷ்வினி, தமிழரசன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் வேடந்தாங்கல் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். தூத்துக்குடி, குளக்காட்டாங்குறிச்சியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் உள்பட மாநிலத்தின் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.