நொறுக்குதீனி சாப்பிட்ட 3 சிறுமிகள் அடுத்தடுத்து மரணம்- கடைக்காரரிடம் போலீஸ் தீவிர விசாரணை!!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் 8 வயது, 7 வயது மற்றும் 5 வயது நிரம்பிய 3 சகோதரிகள் நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூன்று பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சையின்போது அடுத்தடுத்து இறந்துவிட்டனர். நொறுக்குத் தீனி சாப்பிட்ட பிறகு 3 சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த சப்-கலெக்டர், அந்த சிறுமிகளின் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன், அவர்கள் வாங்கி சாப்பிட்ட நொறுக்குத் தீனியின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். மேலும், நொறுக்குத் தீனி விற்பனை செய்த கடை உரிமையாளர், அவரது 2 மகன்கள் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், சிறுமிகள் அந்த நொறுக்குத் தீனி சாப்பிட்டதால்தான் இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Exit mobile version