23 மாணவிகள் புகார்… போக்சோவில் சிக்கிய கணித ஆசிரியர்

தஞ்சை மாவட்டத்தில், கணிதமேதை ராமானுஜம் படித்த பள்ளியில், கணித ஆசிரியர் ஒருவர் மீது 23 பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார் அளித்ததால் அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இதில் தான் கணிதமேதை ராமானுஜம் படித்தார்.

இந்தப் பள்ளியில், கணித ஆசிரியராக சேகர் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேகர் தங்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக 23 மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் அடுத்தடுத்து புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன.

அதையடுத்து மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவிடம் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்தது.

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து அந்தப் புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து கணித ஆசிரியர் சேகரை காவல்நிலையம் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2000ம் ஆண்டு முதலே சேகர் பள்ளி மாணவியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பிளஸ் 2 படிக்கும் மாணவியரின் தோளில் கை போடுவது, நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது அருகில் வந்து நிற்கும்படி சொல்வது என கேவலமான வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

போக்சோ சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர், பல முறை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சேகர் மீது பள்ளி நிர்வாகம், பணியிடை நீக்கம், ஊக்கத் தொகை ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்றனர்.

இந்த முறை அதிகளவிலான மாணவியர் ஒன்று சேர்ந்து புகார் அளித்த நிலையில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். வெறும் கைது நடவடிக்கையோடு நின்று விடாமல், அவரை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, அவருக்குரிய பணப் பலன்கள் அத்தனையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கணிதமேதை ராமானுஜம் படித்த பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர், பாலியல் அத்துமீறலில் சிக்கி போக்சோவில் சிக்கிய சம்பவம் மாணவிகளின் பெற்றோருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version