ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்குங்கள்!! சுப்பிரமணிய சுவாமிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!!

வாராக்கடன் விவகாரம் தொடர்பாக கூடுதல் நெறிமுறைகளை வகுக்க, ரிசர்வ் வங்கியை அணுகி கோரிக்கைகளை வழங்க பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாராக்கடனை வசூலிப்பது தொடர்பாக உரிய நெறிமுறைகளை வகுக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் , விக்ரம் நாத் மற்றும் பிவி நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க முடியும்? இது அரசின் பாலிசி சார்ந்த விவகாரம் என நீதிபதி கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் ஏற்கனவே வழிமுறை வகுத்துள்ளதே! அப்படி இருக்கையில் நீதிமன்றம் இதில் எவ்வாறு தலையிட முடியும்? என கூறி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.

மேலும், வாராக் கடன் தொடர்பான வழிமுறைகளை வகுப்பது தொடர்பான பரிந்துரைகளை உரிய அமைப்பை அணுகி வழங்கலாம் எனவும் குறிப்பாக ரிசர்வ் வங்கியை அணுகலாம் என தெரிவித்தனர்.

இதற்கு, இந்த வாராக்கடன் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது பல்வேறு மக்களை பாதிக்கும் எனவும் குறிப்பாக வங்கிகளில் மக்களின் சிறு சிறு சேமிப்புகள் இதனால் பாதிப்படைகிறது என சுப்ரமணிய சுவாமி தரப்பில் தெரிவிக்கபட்டது.

வாராக்கடன் விவகாரத்தில், மனுதாரர் தனது கோரிக்கைகளை மனுவாக ரிசர்வ் வங்கியை அணுகி வழங்கலாம். மேலும் மனுதாரரின் அந்த கோரிக்கைகளை முக்கியத்துவத்தை பொறுத்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யட்டும் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Exit mobile version