பசியால் விரட்டப்படும் பீகார் மக்கள்…

வடமாநிலத்திலிருந்து வேலைக்காக வரும் மக்களின் பசியின் அவலம்.

தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களை நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் சொல்லுவது பீகாரைத் தான். மிகவும் குறைந்த சம்பளத்திற்கு மாடு போல உழைக்கும் இந்த பீகார் மாநிலத்தவர்கள் பிழைப்பை தேடி இங்கு வர காரணம் என்ன? அவர்களது சொந்த மாநிலத்தில் எந்த வேலையும் இல்லையா….

இந்தியாவின் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இந்திய அரசியலில் பீகார் மாநிலத்திற்கு என்றும் தனி இடம் உண்டு. பீகாரில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் ஒட்டுமொத்த நாடே உற்று நோக்கும். அப்படி தான் தற்போது அங்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள் வெற்றிபெற்ற பிறகு அதை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. அப்படி நிறைவேற்றி இருந்தால் அவர்கள் ஏன் பிழைப்பை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
தமிழகம் போன்ற மாநிலங்களில் எளிதாக கிடைக்கும் வசதிகள் பீகார் மக்களுக்கு இன்றும் எட்டாக்கனியாக தான் உள்ளது. அதில் பிரதானமாய் இருப்பது சுகாதாரம். இந்தியாவில் சுகாதாரத்தில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் பீகார் தான். போதுமான மருத்துவமனைகள் இல்லை. அப்படி மருத்துவமனை இருந்தாலும் அதில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் உயிரிழக்கும் குழந்தைகள். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஏராளமான தாய்மார்கள் வெட்டவெளியில் பிரசவிக்கும் நிலையும் பீகாரில் இன்றும் தொடர்கதையாகி வருகிறது.

சட்டம் ஒழுங்கிலும் பீகார் மற்ற மாநிலங்களை விட பின்னால் தான் உள்ளது. அங்கு நடந்து வரும் குற்றங்களுக்கு காரணிகளே போலீஸ்தான் என மக்கள் கூறுகின்றனர். அரசியல் கட்சியினருடன் சேர்ந்துகொண்டு போலீசார் ஆட்டம் போடுகின்றனர் என்றும் சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பில் மக்கள் புலம்பி தள்ளியிருகின்றனர். பீகாரில் பல தொழில் நிறுவங்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்றதுக்கு சட்டம் ஒழுங்கும் பிரச்னையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலம் இன்னும் முன்னேறாமல் இருக்க முக்கிய காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகள். அங்கு உயர்ந்த சாதியினரே அரசியலில் பெரிய பதவிகளிலும், அரசின் உயர் பொருப்புகளிலும் இருந்து வருகின்றனர். அரசின் சலுகைகளும், திட்டங்களும் சாதிய பாடுபாட்டின் அடிப்படையிலேயே சென்று வருவதாகவும் ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசியல் கட்சிகள் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை வாக்களிக்கும் ஆட்டு மந்தைகளை போலவே மாற்றிஇருகின்றன. தனது வீட்டின் சமையல்காரர் தலித் என்று தெரிந்ததும் அவரை வீட்டின் உரிமையாளர் எரித்து கொள்வது, தலித் என்ற காரணத்தால் அறுவை சிகிச்சைக்கு கிட்னி கிடைக்காமல் உயிரிழக்கும் தலித் ஆண் என்பன போன்ற செய்திகள் பீகார் மாநிலத்தின் சாதிய கொடுமைகளை தோளுரித்து காட்டுகிறது.
இந்த பிரச்சனைகளை சமாளித்து சென்றாலும் பீகார் மக்களை வாட்டி வதைத்து வருகிறது வேலைவாய்ப்பின்மை தான். நாட்டில் வெளிமாநிலத்திற்கு பிழைப்பு தேடும் செல்பவர்களில் அதிமானவர்கள் பீகார் இளைஞர்கள் தான். பிஎல்எப்எஸ் நடத்திய ஆய்வில் பீகாரில் 40 சதவீத இளைஞர்கள் சம்பாதிக்க வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் பேர் படித்த பட்டதாரிகள். ஒட்டுமொத்த இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதத்தை காட்டிலும் பீகாரில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகமாக உள்ளது.

சாதியக்கொடுமை, வேலையில்லை, சாப்பிட உணவு இல்லை, தங்க வீடு இல்லை, சுகாதரம் இல்லை இப்படி எதவும் கிடைக்காத மக்களுக்கு ஒவ்வொரு முறையும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து கொடுத்து அவனை ஏமாற்றி சொந்த மாநிலத்தை விட்டு துரத்தி விட்டிருக்கிறார்கள் இந்த அரசியல் கட்சியினர். வாழவே வழியில்லாமல் வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் இந்த மக்களின் துயரம் எப்போது துடைக்கப்படும் என தெரியவில்லை. அதுவரை அவர்களை மரியாதையுடன் நடத்துவதே நம் கடமை.

பிரபா

Exit mobile version