உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 1கி.மீ தூரத்திற்கு விரிசல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஒரு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. தினந்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றன. மேலும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த தென்மேற்கு பருவமழையின் போது மேல்கூடலூர் பகுதியில் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரிய அளவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் அச்சமடைந்தனர். இதனை அடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்குமாறு உத்தரவிடபட்டுள்ளது.

இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் உள்ள மத்திய புவியியல் துறையை சார்ந்த வல்லுனர் குழு நீலகிரி மாவட்டத்திற்கு வந்துதுள்ளது. இக்குழு விரிசல் ஏற்பட்ட பகுதியில் 2 நாட்கள் ஆய்வு செய்வதுடன் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வானது நாளையும் தொடரும் நிலையில் விரிசலுக்கான காரணம், இனி வரும் நாட்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அப்பகுதியில் எந்த மாதிரியான கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகளை நெடுஞ்சாலைத்துறையினருக்கு அளிக்க உள்ளது.

குழுவின் பரிந்துரைக்கு பின் அதற்கான கட்டுமான பணிகள் அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

Exit mobile version