உத்தரபிரதேச மாநில சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் – பிரின்ஸ் எம்.எல்.ஏ. பங்கேற்பு…

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வேண்டியும், மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி கைது செய்த உத்தரபிரதேச மாநில அரசைக் கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நேற்று மாலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்தது.

கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவர்களை தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த மாநில அரசு அவர்களை காப்பாற்றியுள்ளது. இந்தியாவில் மக்கள் ஆட்சியை காங்கிரஸ் மட்டும்தான் கொடுத்தது.

ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து பா.ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். தலித்துகளுக்கும், ஏழைகளுக்கும் பாதுகாப்பாக முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி நடத்தினார். மத்தியில் உள்ள தற்போதைய ஆட்சியால் மக்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். நல்லாட்சியை காங்கிரஸ் கட்சி மட்டும்தான் கொடுக்க முடியும்.
இவ்வாறு பிரின்ஸ் எம்.எல்.ஏ. பேசினார்.

Exit mobile version