மனிதர்களை காப்பாற்றுமா பஞ்சுமிட்டாய்

கிரேக்க தத்துவ ஞானியான Plato ஒரு முறை “அறிவியல் என்பது நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது” என்று கூறினார். உலகின் பல மேன்மையான கண்டுபிடிப்புகளும் தற்செயலாக யாரும் எதிர்பார்க்காத தருணத்திலேயே நிகழ்த்தப்பட்டது. X-ray, Pennicilin, Microwave oven என பல கண்டுபிடிப்புகளும் அதன் கண்டுபிடிப்பாளர்கள் வேறு ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் போதே கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது Vanderbilt பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான Leon Bellan பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி செயற்கை மனித உடல் உறுப்புக்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விஞ்ஞானிகள் ஆய்வகங்களில் செயற்கையாக உடலுறுப்புகளை வளர்ச்சியில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இரு பரிமாண திசுக்களை உருவாக்கவதைப் போல முப்பரிமானம் கொண்ட வாழும் உறுப்புக்களை உருவாக்குவது மிகவும் கடினமான பணியாகவே இருந்தது. தண்ணீர் மூலம் உருவாக்கப்பட்ட Hydrogel போன்ற திரவங்களைப் பயன்படுத்தி முப்பரிமாண உறுப்புக்களின் கட்டமைப்பை உருவாக்க முயன்றனர். ஆனால் அந்தந்த உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் முற்றிலுமாக வழங்க முடியவில்லை. ஒவ்வொரு செல்லுக்கும் அது நன்கு வளர தேவையான சத்துக்கள் சரியாக சென்றடைய வேண்டும். இல்லையெனில் முற்றிலும் வளர்ச்சி பெறாத சரியாக செயல்படாத உறுப்பே நமக்கு கிடைக்கும். இந்த பிரச்சனைக்கான தீர்வாக பார்க்கப்பட்டது Cappillaries என்றழைக்கப்படும் மயிரிழை போன்ற நுண்குழாய்கள்.

இந்த நுண்குழாய்களை உருவாக்குவது மிகவும் எளிதான காரியம் அல்ல. அதன் தடிமன் சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ‌ இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாது. சரியான அளவில் இருக்கும் இந்த குழாய்களைப் பயன்படுத்தியே வளரும் அந்த உறுப்புக்களுக்குத் தேவையான சத்துக்களை அனுப்ப முடியும். தற்போது வரை விஞ்ஞானிகள் உருவாக்கியதில் மிகவும் சிறியதாக 100மில்லி மைக்ரான் தடிமனான குழாய்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் அவை நமக்கு தேவையான நுண்குழாய்களை விட 10மடங்கு பெரிதாக இருந்தது.

இதற்கான தீர்வைக் கொண்டுவந்தார் Vanderbilt பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையின் பேராசிரியரான Leon Bellan. Electrospinning என்னும் முறையின் மூலம் Nano Fibreகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவை மிகவும் சிறியதாக இருந்ததால் பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. அச்சூழ்நிலையில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பதை பார்த்த Leon Bellanக்கு ஒரு யோசனை தோன்றியது. பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி அதில் இருந்து உருவாகும் பஞ்சுமிட்டாயின் மிக நுண்ணிய இழைகளின் தடிமனைக் கணக்கிட்டார். அது தாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மிகச்சரியாக இருந்தது. எனவே பஞ்சு மிட்டாய் இயந்திரத்தைப் போன்றே சற்று மேம்படுத்தப்பட்ட இயந்திரத்தை உருவாக்கி அதில் Iso Propyl acrylamide எனும் தண்ணீரில் கரையக்கூடிய வகையிலான Polymerஐ பயன்பத்தி நுண்ணிழைகளை உருவாக்கியுள்ளனர். Gelatin எனப்படும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி அவற்றை திடமாக வைத்துக் கொள்கின்றனர்.

இந்த ஆய்வு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் முப்பரிமாணத்தில் செயற்கை உறுப்புகளை உருவாக்குவதில் இவை மிக முக்கிய இடம் வகிக்கும். இதன் மூலம் மிகக் குறைந்த விலையில் செயற்கை முறையில் சிறுநீரகம், கணையம் போன்ற பல உறுப்புக்களை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தலாம்.

Exit mobile version