சென்னையில் மழைவெள்ள நீரை சேமிக்கும் வகையில், கோவளம் அருகே ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு திருப்பி அனுப்பி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள்தொகை பெருகிவரும் நிலையில், குடிநீர் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, சென்னையில் நாளொன்றுக்கு 1100 மில்லின் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் நீர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது. மீதம் உள்ள 750 மில்லியன் லிட்டர் நீர் ஏரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இது 2035ம் ஆண்டில் 2523 எம்எல்டியாகவும், 2050ம் ஆண்டில் 3756 எம்எல்டியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், திருப்போரூர் வட்டம் கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, நீர் தேக்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்தது. இதை பரிசீலனை செய்த மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளது.
அதில், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி தான் தேவை என்று தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளது. மேலும் மழைநீர் கால்வாயில் வரும் நீரை சுத்திகரிப்பு செய்து இந்த நீர்தேக்கத்தில் விடுவது தொடர்பாக சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று குழு தெரிவித்துள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையில் 4375 ஏக்கரில் அமைய உள்ள இந்த நீர்த்தேக்கமானது ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையிலும் 1.6 டிஎம்சி கொள்ளவுடன் ரூ.471 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு கிடைக்கும் 170 எம்எல்டி குடிநீரை கொண்டு சென்னைவாசிகளின் குடிநீர் தேவை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
