டெல்லியில் காற்று மாசு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உத்தரப்பிரதேச மாநில அரசுகளுடன் இன்று அவசர கூட்டத்தை கூட்டி ஒன்றிய அரசு காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காற்று மாசுபாட்டினால் டெல்லி தலைநகரமே சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. இயற்கை காற்றை சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும், ஒரே வழக்காக மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்தமுறை விசாரணையின்போது, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். சாக்குபோக்கு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்தி காற்று மாசுபாட்டை குறைக்கும் வழியை பாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று(நவம்பர் 15) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி அரசு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது. அதில், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக, முழு பொது முடக்கத்தை அமல்படுத்த டெல்லி அரசு தயாராக உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள என்சிஆர் பகுதிகளில் அதுபோன்று பொதுமுடக்கம் விதிக்கப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தடை விதிக்கலாம். வாகன நிறுத்தும் கட்டணங்களை நான்கு மடங்கு வரை உயர்த்தலாம். மெட்ரோ சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். திறந்த வெளியில் கழிவுகளை எரிப்பதை தடுத்து நிறுத்தலாம் உள்ளிட்ட ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பேசிய நீதிபதிகள் “காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த என்ன கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? பிரமாண பத்திரத்தை மறந்து விடுங்கள். சாலையில் ஏற்படும் மாசு..அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
அத்தியாவசியமற்ற போக்குவரத்து, கட்டுமான பணிகள், போக்குவரத்து நெரிசல்,பயிர்க்கழிவுகள் எரித்தல் போன்றவையே காற்று மாசுபாட்டிற்கு முக்கிய பங்களிக்கின்றன. அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க 3 நாட்களுக்கு முழுமையாக வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
தொழிற்சாலை, போக்குவரத்து ஆகியவற்றினால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை டெல்லி அரசாங்கம் துல்லியமாக சுட்டிக்காட்டவில்லை. அதனால், டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க இன்று(நவம்பர் 16) அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஒருவாரத்திற்கு கழிவுகளை எரிக்க வேண்டாம் என்றும் மத்திய அரசின் அவசர கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.