சென்னை வியாசர்பாடியில், திருமண மண்டபத்தில், மின்கசிவு காரணமாக மின்சாரப் பெட்டி வெடித்துச் சிதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்து இரண்டு மணி நேரமாக மின் இணைப்பு சரி செய்யவில்லை எனக்கூறி, மணமக்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சர்மா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரப் பெட்டி வெடித்துச் சிதறியதால், மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மண்டபத்தில் மின் இணைப்பை சரி செய்ய மணமக்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இரண்டு மணி நேரமாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை எனக்கூறி, வியாசர்பாடி-மூலக்கடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நேர்ந்த அதிர்ச்சியில் மணமகனின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதே போல, மணமகளும் மயங்கி விழுந்ததால், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.