டெல்லியில் பெண் காவலர் ரஃபியா சைஃபி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் சிந்தனையாளர்கள் மற்றும் பெண் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் 21 வயதே நிரம்பிய பெண் காவலர் ரஃபியா, மார்பகங்கள் அறுக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு நீதி கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற கொடூர மரணம் அரங்கேறியிருக்காது என வேதனை தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நிர்பயா வழக்கில் கிடைத்த நீதி போல ரஃபியா வழக்கிலும் இந்தியாவின் மகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.