11 வயதில் முதல் பங்கு முதலீடு; இன்று உலகமே கவனிக்கும் முதலீட்டு மேதை! — வாரன் பஃபெட்டுக்கு 96 வயது

சிறுவயதில் செய்தித்தாள் விநியோகம் முதல் Berkshire Hathaway வரை…
‘Oracle of Omaha’ உருவான சுவாரசியப் பயணம்


உலகின் மிகப் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் இன்று தனது 96-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1930 ஆகஸ்ட் 30-ஆம் தேதி அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமாஹாவில் பிறந்த அவர், முதலீட்டு உலகில் தனக்கென ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி பல தலைமுறை முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

Warren Buffett சிறுவயதிலிருந்தே வணிகம் மற்றும் முதலீட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பங்குச் சந்தையில் மிக இளம் வயதிலேயே காலடி எடுத்து வைத்த அவரது பயணம் பின்னாளில் உலகின் மிகப்பெரிய முதலீட்டுப் பேரரசுகளில் ஒன்றை உருவாக்கியது.
11 வயதில் முதல் பங்கு!

பஃபெட்டின் முதலீட்டுப் பயணத்தில் மிகவும் சுவாரசியமான விஷயம், அவர் தனது 11 வயதிலேயே முதல் பங்குகளை வாங்கியது.
Cities Service Preferred நிறுவனத்தின் பங்குகளை அவர் தனது சகோதரியுடன் சேர்ந்து வாங்கினார். பங்கு விலை குறைந்தபோதும் காத்திருந்து, விலை மீண்டதும் சிறிய லாபத்தில் விற்றார். ஆனால் அதன்பிறகு அந்தப் பங்கின் விலை மிக அதிகமாக உயர்ந்தது. முதலீட்டில் பொறுமையின் முக்கியத்துவத்தை மிக இளம் வயதிலேயே கற்றுக்கொண்ட அனுபவமாக இதை பஃபெட் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தித்தாள் போட்ட சிறுவன்

பஃபெட்டின் தொழில் ஆர்வம் பங்குச் சந்தையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சிறுவயதில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகித்து பணம் சம்பாதித்தார். Pinball machine business உள்ளிட்ட சிறிய முயற்சிகளிலும் ஈடுபட்டார். தான் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்பதைவிட மீண்டும் முதலீடு செய்வதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. பின்னர் Columbia Business School-ல் கல்வி பயின்றபோது புகழ்பெற்ற value investor பெஞ்சமின் கிரஹாமிடம் கற்றுக்கொண்டது பஃபெட்டின் முதலீட்டுச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Berkshire Hathaway உருவான கதை

இன்று பஃபெட்டுடன் பிரிக்க முடியாத பெயராக மாறியுள்ள Berkshire Hathaway⁠. ஆரம்பத்தில் ஒரு ஜவுளி நிறுவனம். 1960-களில் அந்த நிறுவனத்தின் பங்குகளை பஃபெட் வாங்கத் தொடங்கினார். பின்னர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்ற அவர், காலப்போக்கில் ஜவுளித் தொழிலிலிருந்து அதன் கவனத்தை முதலீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களை வைத்திருக்கும் holding company அமைப்புக்கு மாற்றினார். Insurance, energy, railways, manufacturing மற்றும் consumer businesses என பல துறைகளில் Berkshire விரிவடைந்தது.

Coca-Cola முதல் Apple வரை…

பஃபெட்டின் முதலீட்டு அணுகுமுறையில் மிக முக்கியமானது, குறுகிய காலத்தில் பங்கு விலை எங்கு செல்லும் என்பதை கணிப்பதைவிட நல்ல நிறுவனங்களை நியாயமான விலையில் வாங்கி நீண்டகாலம் வைத்திருப்பது. Coca-Cola போன்ற நிறுவனங்களில் Berkshire மேற்கொண்ட நீண்டகால முதலீடுகள் இதற்கு பிரபலமான உதாரணங்களாக உள்ளன. பின்னர் Apple நிறுவனமும் Berkshire-ன் மிக முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உருவெடுத்தது. இந்த அணுகுமுறையே பஃபெட்டுக்கு முதலீட்டு உலகில் “Oracle of Omaha” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

பஃபெட்டின் முதலீட்டுப் பயணம் சொல்லும் 5 பாடங்கள்

  1. புரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம்: ஒரு நிறுவனம் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு பஃபெட் முக்கியத்துவம் அளித்தார்.
  2. பங்கின் விலையை மட்டும் பார்க்காதீர்கள்: அந்தப் பங்குக்குப் பின்னால் இருக்கும் நிறுவனத்தின் தரம், வருவாய் திறன் மற்றும் போட்டித்திறன் முக்கியம்.
  3. பொறுமை மிகப்பெரிய பலம்: தினசரி சந்தை ஏற்ற இறக்கங்களை விட நீண்டகால வளர்ச்சிக்கே அவரது முதலீட்டு அணுகுமுறை முக்கியத்துவம் அளித்தது.
  4. கடனை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்: அதிகப்படியான கடன் முதலீட்டாளரின் நிதி நிலையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பது பஃபெட்டின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளில் ஒன்று.
  5. பணத்தைவிட நேரம் முக்கியம்: நீண்டகால compound growth பஃபெட்டின் செல்வ உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்கு வகித்தது.

பெரும் செல்வத்தின் பெரும்பகுதி அறப்பணிக்கு

பஃபெட்டின் வாழ்க்கையின் மற்றொரு குறிப்பிடத்தக்க பகுதி அவரது philanthropy. தனது செல்வத்தின் பெரும்பகுதியை அறப்பணிகளுக்காக வழங்குவதாக அவர் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். Bill Gates மற்றும் Melinda French Gates ஆகியோருடன் இணைந்து Giving Pledge முயற்சியையும் அவர் தொடங்கினார். இதில் உலகின் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை சமூக நலனுக்காக வழங்க உறுதியளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

96 வயதில் ஒரு முதலீட்டு சகாப்தம்

பல தசாப்தங்களாக Berkshire Hathaway-ஐ வழிநடத்திய பஃபெட், 2025 இறுதியில் CEO பொறுப்பிலிருந்து விலகினார்; 2026 ஜனவரி 1 முதல் Greg Abel CEO பொறுப்பை ஏற்றார். பஃபெட் Berkshire-ன் chairman ஆகத் தொடர்கிறார். 11 வயதில் வாங்கிய சில பங்குகளில் தொடங்கிய அவரது முதலீட்டுப் பயணம், 96 வயதில் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் படிக்கும் ஒரு தனித்துவமான வரலாறாக மாறியுள்ளது.

Exit mobile version