பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்டை விரட்டியடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 1 மணி 20 நிமிடம் தேவைப்பட்டது.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை டேனியலி காலின்சை வெளியேற்றி முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
சோபியா கெனின் அரையிறுதியில் கிவிடோவாவுடன் விளையாடுகிறார். மற்றொரு அரையிறுதியில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா)- இகா ஸ்வியாடெக் (போலந்து) சந்திக்கிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-5, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை தோற்கடித்து முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
முன்னதாக நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 19 வயதான இத்தாலியின் ஜானிக் சின்னெரை தோற்கடித்து 13-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் 100-வது ஆட்டத்தில் ஆடிய நடால்0க்கு இது 98-வது வெற்றியாகும்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வாட்ஸ்மேன் 7-6 (7-1), 5-7, 6-7 (6-8), 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான டொமினிக் திம்முக்கு (ஆஸ்திரியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி 8 நிமிடம் நீடித்தது.
அரையிறுதியில் நடால்- ஸ்வாட்ஸ்மேன் மோதுகிறார்கள்.