கொரோனா வாரியர்ஸ்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள்! டூடுல் வெளியிட்டு கவுரவம்

கொரோனா முன்கள பணியாளர்களாக இருக்கும் பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தி இருக்கிறது கூகுள் நிறுவனம்.

உலகம் முழுவதும் கொரோனா தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக வீசி வருகிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி பலர் பலியாகி வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவ பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவித்திருக்கிறது.

அனிமேஷன் செய்யப்பட்டிருக்கும் டூடுலின் இடது புறம், கண்ணாடியுடன் விஞ்ஞானி ஒருவர் பணி செய்து கொண்டிருக்கிறார். அவரது அருகில் கொரோனா உச்சத்தில் இருக்கும் வரைபடமும், அதனையொட்டி, கொரோனா பரவல் குறைந்திருக்கும் படமும் மாட்டப்பட்டிருக்கிறது. மேசை ஒன்றில் உலக உருண்டை சுற்றி கொண்டிருக்கிறது. அதன் அருகில் புத்தகம் ஒன்று இருக்கிறது. மேலும் அதன் மேல்புறம், ஒரு இதய வடிவ எமோஜியும் இடம்பிடித்திருக்கிறது. இத்துடன் கொரோனா வாரியர்ஸ்களுக்கு விளக்கத்துடன் நன்றியையும் தெரிவித்திருக்கிறது.

“நன்றி: பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைருக்கும் இதய வடிவிலான எமோஜியின் மூலம் கூகுள் நன்றி தெரிவிக்கிறது” என்று கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், “அனைத்து பொது சுகாதார ஊழியர்களுக்கும், விஞ்ஞான சமூகத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்றி” என்று அது மேலும் கூறியது.

Exit mobile version