ஆகஸ்ட் 15ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று (வருகிற 15ம் தேதி) காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்த கூடாது எனவும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இடம், நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1-4-2024 முதல் 31-7-2024 முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு, கட்டிட அனுமதி, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version