நம்மைத் தாங்கும் பாதங்களை அழகாகப் பாதுகாக்க வீட்டிலேயே செலவில்லாமல் ஸ்பா போல செய்து கொள்ளலாம். பாதங்களை எப்போதும் மிருதுவாக பளபளப்புடன் வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட குறிப்புகளை செய்து பாருங்கள்.
- முதலில் கால் விரல்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட வேண்டும். அதற்கு அசிட்டோன் என்னும் நெயில் பாலிஷ் ரிமூவர் இருக்கிறது.
- நெயில் பாலிஷை நீக்கியப் பின், நகங்களை வெட்டி விட வேண்டும். வேண்டுமென்றால் நகங்களை வெட்டலாம், ஏனெனில் தினமும் வெளியே செல்வதால், நகங்களில் அழுக்குகள் புகுந்துவிடும். ஓரளவு மட்டும் வைத்துக் கொண்டால் போதுமானது.
- கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை சேர்த்து, 8-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.
- பிறகு மென்மையான பிரஸ் அல்லது படிகக்கல்லை வைத்து பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளும் முற்றிலும் நீங்கிவிடும். மேலும் தேய்க்கும் போது, கால் விரல்களின் முனைகளில் நன்கு தேய்த்துவிட வேண்டும்.
- தேய்த்தப் பின்னர், மறுபடியும் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு, பாதங்களை அதில் 4-5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின் எலுமிச்சையை வைத்து, பாதங்களில் ஒரு முறை நன்கு தேய்த்துவிட வேண்டும்.
- பிறகு, குளிர்ச்சியான நீரில், பாதங்களுக்கு சோப்பு போடாமல் கழுவ வேண்டும்.
- இறுதியாக பாதங்களுக்கு உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை போட்டதால், பாதங்கள் வறண்டு இருக்கும். ஆகவே மறக்காமல், கால்களுக்கு மாய்ச்சுரைசர் கிரீமை தடவ வேண்டும். வேண்டுமென்றால், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் அல்லது ஏதேனும் ஒரு பாடி லோசனை தடவலாம். இதனால் கால்கள் நன்கு ஈரப்பதத்துடன் பார்க்க அழகாக இருக்கும்.
