தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக, நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதமியில் வருமான வரி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் தமிழிசை வழங்க, ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, சூப்பர் டேக்ஸ் பேயர். பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன் வந்துள்ளனர். அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அரசுக்கு முறையாக வரி செலுத்தினால் மட்டுமே பல நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும். இல்லையேல், இருப்பதையும் இழந்து விடுவோம். வருமான வரி செலுத்த கடைசி நாள் இது என்று அறிவித்தாலும் மக்கள் கால நீட்டிப்பை எதிர்பார்க்கின்றனர். கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த வருமான வரித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடைய பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்” இவ்வாறு தெரிவித்தார்.
– பா.ஈ.பரசுராமன்.
