மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… கொடூரம்!

மனவளர்ச்சி குன்றிய 12ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டியில், மனவளர்ச்சி குன்றிய 17வயது சிறுமி 12ம் வகுப்பு படித்து வந்தார். அச்சிறுமி, பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி அந்த சிறுமியை பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். பிறகு, பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

சிறுமி தாமதாக வீட்டிற்கு வருவதை அறிந்த அவளது தாயார் என்ன காரணம் என கேட்க, சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் மனவளர்ச்சி குன்றிய அச்சிறுமியை அழைத்துச் சென்றவர் சின்னப்பாப்பனூத்து பகுதியை சேர்ந்த கரிச்சக்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version