மதுரையை சேர்ந்த ஏடிசி சட்ட நூல் மையம் 300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டநூல்கள் தேவையான அளவுக்கு தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என காரணம் சொல்லப்பட்டது. இதை முறியடிக்கும் வகையில், பல சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தும், சட்டநூல்களை தமிழ் -ஆங்கிலம் இருமொழி பதிப்பாகவும் ஏடிசி சட்ட நூல் மையம் வெளியிட்டு வருகிறது.
இதுகுறித்து இந்த மையத்தின் நிறுவனர் ஏடிசி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
1986ம் ஆண்டு இந்த மையத்தை தொடங்கினோம். தொடக்கத்தில் அரசுத்தேர்வுகளுக்கான நூல்களை வெளியிட்டு வந்தோம். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருமாதங்களுக்கு ஒருமுறை தீர்ப்பு திரட்டு என்ற இதழை வெளியிட்டோம். மாவட்ட நீதிபதிகள் அஸ்தஸ்திலான நீதிபதிகள் குழுவானது, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு வந்தது.
2002-ல் ‘குற்றவியல் சட்டங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு கிடைத்தது. ‘இந்திய தண்டனைச்சட்டம்’ ‘குற்றவியல் விசாரணை முறைச்சட்டம்’ ‘இந்திய சாட்சியங்கள் சட்டம்’ ஆகியவற்றை ஒரே தொகுப்பாக வெளியிட்ட நூல் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவில் வழக்குகள் தொடர்பான நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டோம்.இடது பக்கம் ஆங்கிலத்திலும், வலது பக்கம் தமிழிலும் இருக்கும் வகையில், இந்த சட்டநூல்கள் வடிவமைக்கப்படுவதால், அனைவரும் எளிதில் சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்ள முடியும்.
அரசு வழக்குரைஞர் பி.தங்க அரவிந்த் தலைமையிலான சட்டநூல் மையமானது சட்ட நூல்கள் வெளிவருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு இந்த குழுவும் செயல்பட்டு வருகிறது.வழக்குரைஞர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் சட்டநூல்களை வாங்கிச் செல்கின்றனர். இதுவரை 200 மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள், 100 இரு மொழி பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ளோம். இந்த சேவை இனியும் தொடரும் என்றார்.
-பா.ஈ. பரசுராமன்.
