சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியான ‘வாடிவாசல்’ காட்சிகளின் தொகுப்பு 36 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். ‘சூரரைப்போற்று, ஜெய்பீம்’ வெற்றி திரைப்படங்களுக்கு பின் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு காரணம் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படத்தின் கதையம்சம். இப்படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக சூர்யா நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதித்தப் போது ஒட்டுமொத்த இளைஞர்களும் ஒன்றுகூடி ’மெரினா புரட்சியை’ ஏற்படுத்தி மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்தனர். அந்த வகையில், ‘ஜல்லிக்கட்டு’ பெயரை கேட்டாலே இளைஞர்களின் உடம்பில் புது ரத்தம் பாயும். புத்துணர்ச்சி பிறக்கும், வலிமை அதிகரிக்கும். இந்நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வாடிவாசல் திரைப்படம் எடுக்கப்பட்டபோது சூர்யா, மாடுபிடி வீரர்களிடம் இருந்து ஏறுதழுவுதலின் நுட்பங்களை பயின்றார். அப்போது பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை வீடியோவாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், காளையை பிடிக்க வாடிவாசலில் நிற்கும் சூர்யாவை பார்த்து முறைக்கும் காளைகள்; காளையின் காலடி தடங்கள்; மல்லுக்கட்ட தயாராகும் சூர்யா, என பல்வேறு காட்சி அமைப்புகள் இடம்பெற்றிருந்தது. இறுதியாக, வாடிவாசல் நாயகனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள் என வரும். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், தற்போதுவரை 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இது, விரைவில் 1 கோடி பார்வைகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-பா.ஈ.பரசுராமன்.
