அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், வடசென்னை காங்கிரஸ் கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு தொடர்பாக தினமும் அமலாக்க துறையினர் விசாரணை என்ற பெயரில் சோனியா காந்தியை வரவழைத்து அலைகழிப்பதாக கூறி, அதனை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது திடீரென்று தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை குண்டு கட்டா கைது செய்தனர். இதனால் போலீஸாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.