வீட்டின் முன்பு ஆபாசமாக பேசியதை தட்டிக் கேட்டதால் கொலை

வீட்டின் முன்பு ஆபாசமாக பேசி சத்தம் போட்டதை தட்டி கேட்டதால் வீட்டு ஓனரை 4 வாலிபர்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே கோடாங்கிபட்டி  பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (61). இவர் மரக்கடை  வைத்திருந்தார். நேற்று தனது வீட்டின் முன்பு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் சுகுமார் (19), அமராவதி பள்ளித் தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் கபில் (21), சந்திரகுமார் மகன் சேவாக் (19) மாணிக்கம் மகன் அஜித் (20) ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் சத்தமாக பேசியுள்ளனர். இதை பாண்டியன் கண்டித்தார். அப்போது, ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். அங்கு வந்த சேவாக்கின் தந்தை சந்திரக்குமாரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாண்டியனின் மனைவி அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுகுமார், சேவாக், கபில், அஜித் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version