குரூப் சி பணியிடங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வயது தளர்வு

புதுச்சேரி அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 32 ஆயிரம் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், 22 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை துறை ரீதியாக எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கான வயதுவரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த வயது தளர்வு ஒவ்வொரு பதவியிலும் முதல் நேரடி நியமனம் அல்லது 2023-24 நிதியாண்டு மார்ச் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பணி நியமனத்தின் போது அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் குரூப் சி பதவியை பொருத்தவரை 20,526 அரசு ஊழியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்டிசி,யுடிசி, பல்நோக்கு ஊழியர் உள்ளிட்ட பதவிகள் குரூப் சி பதவியை சார்ந்தவை. இந்த பதவிகளை மாநில அரசே நேரடியாக நிரப்ப அதிகாரம் உள்ளதால் வயதுதளர்வு விசயத்தில் முக்கிய முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகள் தளர்வு மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version