தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்கக் கூடாது என உத்தரவிடவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்கிடையே அரியானா மாநிலத்தில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசியக் கொடிவாங்குமாறும் நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை மாநில அரசுகள் உறுதிபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
