செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ₹386 செலுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் 35வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று தொடர்ச்சியாக 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை முதல்தவணை தடுப்பூசியை 96.26%மும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 90.15% மக்களும் செலுத்தியுள்ளனர். 12வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் ₹386 செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
