ஆன்லைன் மூலம் இருவழிப் பயணச்சீட்டை (up and down) முன்பதிவு செய்வோருக்கு பயணச்சீட்டு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் என்று அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
300 கி.மீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி வாயிலாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தற்போது, அந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த சலுகை மாற்றுத்திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் & பண்டிகைக் கால சிறப்பு பேருந்துகளுக்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.