திண்டுக்கல் – பழநி ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திண்டுக்கல் – பழநி ரயில்பாதை 58 கிலோ மீட்டர் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, மின்சார ரயில்களை இயக்குவதற்காக, 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை மின் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. மின்சார ரயில் இயக்கும்போது பொதுமக்கள் ரயில்பாதை அருகே நெருங்கினால் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் பாதையை யாரும் நெருங்க வேண்டாம். இந்த ஆய்வுக்கு பின் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.