எனக்கு யூடியூப் மூலமே 4 லட்சம் வருமானம் வருகிறது: நிதின் கட்கரி

கொரோனா ஊரடங்கு காலத்து அனுபவங்களை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்த சமயத்தில் இணையப் பயன்பாடும் அதிகரித்தது. குறிப்பாக யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

அந்த வகையில் ஊரடங்கு காலத்தில், வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் யூடியூப் சேனலில் விரிவுரைகளை வழங்கியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிதின் கட்கரி, பின்னர் ரட்லம் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு வேலைகளைச் செய்தேன். ஒன்று சமையல் செய்யத் தொடங்கினேன். மற்றொன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விரிவுரைகளை வழங்க ஆரம்பித்தேன். அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்தேன். அதிக அளவிலான பார்வையாளர்கள் கிடைத்தனர். இதனால் தற்போது எனக்கு மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.அடுத்தாக விரைவுச் சாலைகள் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவித்த அவர், டெல்லி மும்பை விரைவு சாலைப் பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். ஒரு லாரியில் டெல்லியிலிருந்து மும்பை செல்ல 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவு சாலையில் 18 மணி நேரத்தில் செல்லலாம் என்றும் விளக்கியுள்ளார்.

Exit mobile version