திருச்சி மத்திய மண்டல காவல்துறையினருக்கானகுறைதீர் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டம் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அச்செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “காவல்துறையினரின் குறைதீர் கூட்டம் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் வரும் 16ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் ஒருமணிவரை இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக 500 பேர் மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. இதில் மேலும் சில டைரிகள் சிக்கியுள்ளது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர் என்றார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை அறிக்கை வந்த பின்னர் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக பள்ளி மாணவர்களிடையே கரோனா அச்சம் மற்றும் செல்ஃபோனால் பெரும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைவதற்காகப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் நடத்தப்படும் கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறையினரும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மண்டலத்தில் உள்ள பெண்கள் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்படும். பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.