2020-21-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.
அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று (18.11.2020) தொடங்கி நாளை மறுதினம் (20.11.2020) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார். அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த கலந்தாய்வு தொடங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.அதன் தொடர்ச்சியாக நாளை (19.11.2020) நீட் தேர்வின் அடிப்படையில் இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கின்றது. மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை இன்று பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகின்றார்.