இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!!


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மில்னே பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் மாலன் களமிறங்கினார். மறுபுறம் பட்லர் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் இஷ் சுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, மொயின் அலி களமிறங்கினார். மாலன், மொயின் அலி இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக ஆடிய டேவிட் மாலன் 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய மொயின் அலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், டேர்ல் மிட்செல் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்தில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ரிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். அவரும் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து டீவோன் கான்வே களமிறங்கினார். மறுபுறம் டேர்ல் மிட்செல் நிதானமாக ஆடிவந்தார். இருவரும் இணைந்து விக்கெட் இழப்பைத் தடுத்தனர். எனினும் இருவரும் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்தனர். 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். அதனால், 13.4 ஓவரில் அணி நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. அதனையடுத்து, களமிறங்கி க்ளென் ப்ளிப்ஸும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது நியூசிலாந்து. அந்த நிலையில் தான் ஜேம்ஸ் நீசம் களமிறங்கினார்.

23 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கிய நீசம் தொடக்கம் முதலே அதிரடியைக் காட்டினார். இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சைச் சிதறடித்தார். 11 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஜேம்ஸ் நீசம் 27 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி நல்லதொரு பேட்டிங்கை கொடுத்தார். மறுபுறம் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் களத்தில் நின்ற மிட்செல் இறுதியில் அதிரடியைக் கையில் எடுத்தார். 19-வது ஓவரில் வோக்ஸ் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 19-வது ஓவரின் இறுதி பந்தில் பவுண்டரி அடித்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மிட்செல் 72 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் நியூசிலாந்து அனி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

Exit mobile version