கடலூர் மாவட்டத்தில், பறிமுதல் செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் போலீசார் உதவியுடன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
போதைப் பொருட்களால் நாட்டில் அதிகளவில் குற்றங்கள் நடைபெறுகிறது. இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ‘போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துங்கள்’ என்று டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்டப் போலீசாருக்கும் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் களத்தில் இறங்கிய போலீசார் அன்றாடம் அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களைப் பிடித்தும், போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அப்படி பறிமுதல் செய்யப்பட்டு, புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்காவை, சில போலீசாரே திருடி கடைகளில் விற்பனை செய்து பணம் பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கோட்டம் புதுப்பேட்டைக் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோவில் குட்கா கடத்தப்படுவதை அறிந்து, ஸ்கெட்ச் போட்டுப் பிடித்த புதியதாக வந்த டிஎஸ்பி சபிபுல்லாவின் ஸ்பெஷல் டீம், குட்காவையும், பிடிபட்ட ஜெயபாலையும் புதுப்பேட்டைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது.
இதையடுத்து வீரப்பெருமாள் நல்லூரில் ஒரு வீட்டில் ஜெயபால் அதிகளவு பதுக்கி வைத்திருந்த குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார், அதனைப் புதுப்பேட்டைக் காவல் நிலையத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர்.
இந்நிலையில் தான், போலீசார் உதவியுடன் காவல் நிலையத்திலிருந்த சுமார் ஒரு டன் குட்காவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விற்பனை செய்து வந்தார் இன்ஸ்பெக்டருடைய ஓட்டுநர் ராஜா. இந்த ராஜா மீது ஏற்கனவே ஒரு புகார் உள்ளது. அதாவது, பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ஓட்டுநராக இருந்தபோது தென் பெண்ணையாற்றில் மணல் கொள்ளையடிப்பதை இரவு முழுவதும் கணக்கு எடுத்து, மறுநாள் காலையில் லோடுக்கு இவ்வளவு பணம் என்று வசூல் செய்து பெண் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்து வந்ததாக புகார் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராஜா, காவல் நிலையத்திலிருந்து தினம்தோறும் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யும் தகவல்கள் எஸ்பிக்கு கிடைத்ததும், ஏடிஎஸ்பி ஒருவரை விசாரணைக்கு அனுப்பி வைத்தார். ஏடிஎஸ்பி கொடுத்த அறிக்கையின் படி குட்காவை திருடிக் கொள்ளையடித்த ஓட்டுநர் ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய இரு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதுப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி மெமோ கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வேலியே பயிரை மேயும் கதைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.