இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டுத் திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! – மதுரையில் கொடூர சம்பவம்

மதுரையைச் சேர்ந்த விவாகரத்தான இளம்பெண் ஒருவர் தனது குடும்பச் சூழல் காரணமாக கட்டுமானப்பொருள் விற்கும் கடையொன்றில் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, கடையை அடைத்துவிட்டுக் கடை உரிமையாளர், சக ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து செல்லூரிலிருக்கும் திரையரங்கில் இரவுக் காட்சி பார்க்கச் சென்றிருக்கிறார்.

படம் முடிந்து பின்னர், கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர் ஒருவர் அந்தப்பெண்ணை அவர் வீட்டில் இறக்கிவிடுவதற்காக டூவீலரில் சென்றுள்ளனர்.

அப்போது, டவுன்ஹால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, திலகர் திடல் கான்ஸ்டபிள் முருகன், அந்த டூவீலரை நிறுத்தி
விசாரணை நடத்தினார். அந்தப்பெண்ணும் அவருடன் இருந்த நபர்களும், தாங்கள் திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறியும், கான்ஸ்டபிள் முருகன் அவர்களை விடவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்தப்பெண்ணை பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் தொடர்புப்படுத்தி கான்ஸ்டபிள் முருகன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது அந்த பெண்ணுடன் வந்திருந்த கடை உரிமையாளர், “எங்களுக்குள் எந்த வித தவறான தொடர்பும் இல்லை. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடை ஊழியர் என்ற அடிப்படையில் அவரை அழைத்துக்கொண்டு திரைப்படம் பார்க்கச் சென்றேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத காவலர் முருகன், இதை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதனால், பயந்துபோன மகேஷிடம் ரூ.11,000, மொபைல் போன், ஏ.டி.எம் கார்டுகளை பறித்துக்கொண்டு, கான்ஸ்டபிள் முருகன் அந்தப்பெண்ணை மட்டும் விசாரித்துவிட்டு பத்திரமாக அனுப்பி வைப்பதாகக் கூறி கடை உரிமையாளரையும், அவருடன் இருந்தவரையும் விரட்டியனுப்பியிருக்கிறார். அதையடுத்து, அங்கிருந்த மற்றொரு காவலரையும் முருகன் வேறு இடத்துக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. 

அதன்பின், அந்த பெண்ணிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கூறிய கான்ஸ்டபிள் முருகன், அவருக்குத் தெரிந்த லாட்ஜூக்கு அழைத்துச் சென்று பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர், காலையில் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

அதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபோதுதான், அவர் தனக்கு நடந்த கொடுமைகளைத் தெரிவித்திருக்கிறார். 

இதற்கிடையில், கடை உரிமையாளர், அந்தப்பெண் கடைக்கு வேலைக்கு வராததால், பயந்து அவரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோதுதான் நடந்த விஷயங்கள் தெரிந்திருக்கிறது. மேலும், தன்னிடமிருந்து ஏ.டி.எம் கார்டுகளை கைப்பற்றிய கான்ஸ்டபிள் முருகன், அதிலிருந்து ரூ.30,000 எடுத்ததும் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, கடை உரிமையாளரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

முதலில் இவர்களின் புகாரை காவல்துறையினர் நம்பவில்லை. பின்னர், திலகர் திடல் உதவி கமிஷனர் ரவீந்திரநாத் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்று, கமிஷனரிடம் தெரிவித்தார். அதையடுத்து, அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார் முருகனைக் கைது செய்தனர். உடனே அவரை இடைநீக்கம் செய்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார். 

கான்ஸ்டபிள் முருகன் திடீர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சில மாதங்களுக்கு முன் மது அருந்திவிட்டு கடையில் தகராறு செய்த புகாரில் திலகர் திடல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இந்த கொடூரத்தைச் செய்திருக்கிறார். அவர் இதுபோல வேறு குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

இரவு நேரங்களில் இதுபோல் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களை அந்தப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Exit mobile version