பஞ்சாப்பின் முதல் தலித் முதலமைச்சர்!!

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் செப்டம்பர் 18ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து நேற்று (செப்டம்பர் 19) பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னி மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நெருக்கமானவர். மேலும் அமரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்.

பஞ்சாப் விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ட்விட்டரில் புதிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவரின் அதாவது முதலமைச்சரின் பெயரை அறிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை செப்டம்பர் 19 அன்று சந்தித்தனர். அப்போது புதிய ஆட்சி அமைக்க சரண்ஜித் சிங் உரிமை கோரினார்.

அதன்பின், “காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் ஒருமித்த முடிவுக்குப் பிறகு, நாங்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். பதவியேற்பு விழாவுக்கு ஆளுநர் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று பஞ்சாபின் முதல்வராகப் பதவியேற்க உள்ள சன்னி கூறினார்.

பஞ்சாப் வரலாற்றிலேயே தலித் இனத்தைச் சேர்ந்தவர் முதல்வராகப் பொறுப்பேற்பது இப்போதுதான் முதன்முறையாக நடக்கிறது. சரண்ஜித் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தலித் வாக்குகளை வெல்லும் முயற்சியாகக் கருதப்படுகிறது. பஞ்சாப் மாநில மக்கள்தொகையில் தலித் மக்கள் 32% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version