முழுமையாக அகற்றுக – நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், தலைவர்களின் பிறந்தநாட்கள், கட்சியின் முக்கியமான நாட்களின் போது தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைத்துக் கொள்ளலாம் எனவும் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யக் கோரி கடந்த ஜனவரி 28ந் தேதி உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்க கூடாது எனவும் பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு ரூ 1000 கட்டணமாக வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்தது.

பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version