சிஎஸ்கே அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இவரா? முன்னாள் வீரர் பரிந்துரை செய்த அந்த உள்ளூர் வீரர் யார்?

எந்த சுழற் பந்துவீச்சாளரை ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று வீரராகத் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் தங்கள் யோசனைகளைக் கூறி வருகின்றனர். முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா உள்ளூர் வீரர் ஒருவரை கூறி வியக்க வைத்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், தொடருக்கான பயிற்சியில் தாமதமும் ஏற்பட்டது.

மறுபுறம், அணியின் அனுபவ வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை சிஎஸ்கே சரிசெய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்கா 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் சர்வதேச அனுபவம் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பாட்டின்சனை அந்த அணி தேர்வு செய்துள்ளது. மற்ற அணிகளும் அனுபவ வீரர்களையே மாற்று வீரர்களாக தேர்வு செய்ய விரும்புகின்றன.

ஆனால், சிஎஸ்கே அணிக்கு உள்ளூர் வீரர் ஒருவரை பரிந்துரை செய்துள்ளார் தீப் தாஸ்குப்தா. அந்த வீரர் ஜலஜ் சக்ஸேனா. ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சி தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி வரும் இந்த சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயதாகும் ஜலஜ் சக்ஸேனா 123 உள்ளூர் முதல் தர போட்டிகளில் 6334 ரன்களும், 347 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 35.98. பந்துவீச்சு சராசரி 27. 54 உள்ளூர் டி20 போட்டிகளிலும் ஆடி உள்ளார். அதில் 49 விக்கெட் வீழ்த்தி, 633 ரன்கள் எடுத்துள்ளார்.

அவர் அதிக டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும், அவர் ஆடிய டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார் தீப் தாஸ்குப்தா.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றே மைதானங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால், போட்டியின் பின் பகுதியில் ஆடுகளம் மோசமாக மாறி, சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் அதற்கேற்ற வீரரையே சிஎஸ்கே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தீப் தாஸ்குப்தா.

சென்னை அணி எவ்வாறு செயல்படுகிறது என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version