நாளை மீண்டும் சி.எஸ்.கே. – மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.), மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
Dhoni Rohit

ஐ.பி.எல். தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மாலை 7.30 மணிக்கு விளையாடவுள்ளன. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று, 3-வது இடத்தில் வலுவான நிலையில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய 99.99 சதவீதம் இழந்து விட்டது. ஆனால், ஒருவேளை இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் சென்னை வென்றால் கூட, அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு வருமா என்பது சந்தேகமே. இதனால் வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை அணிக்கு பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என எதுவுமே சரியாக அமையவில்லை. அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. எனவே அந்த உத்வேகத்துடன் மும்பை அணிக்கெதிராக சி.எஸ்.கே. விளையாடும்.

மும்பை இந்தியன்ஸ் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. சி.எஸ்.கே.-யிடம் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் விளையாடி வெற்றியுடன் பாயின்ட் டேபிளில் முதல் இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி விரும்பும்.

அந்த அணியின் குயின்டன் டி காக், சூர்யக்குமார் யாதவ், கேப்டன் ரோஹித் சர்மா, இஷன் கிஷண், ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, கைரன் பொல்லார்ட், குல்டர் நைல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்கள் அணியின் தூண்களாக உள்ளனர். அதேபோல் பந்து வீச்சில் அந்த அணிக்கு பும்ரா, ராகுல் சாஹர், குல்டர் நைல், டிரென்ட் போல்ட் ஆகியோர் எதிரணியை மிரட்டி வருகின்றனர். எனவே அந்த அணியை சமாளிப்பது சி.எஸ்.கே. அணிக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

Exit mobile version