இரண்டு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்: வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

இரண்டு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் ஆனதைக் கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிஹார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு நாள் இரவுக்குள் 900 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கதிஹார் மாவட்டம், பாகுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார். இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவருக்கும் பள்ளியின் சார்பில் கிராம வங்கியில் வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது. திடீரென நேற்று முன்தினம் இரவு ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த தகவலையடுத்து, இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பிள்ளைகள் சொல்வதை நம்பிய பெற்றோர், ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, இதில் சிறுவன் ஆசித் குமார் கணக்கில் ரூ.6.2 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.90 கோடியும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்தபோது, வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கி அதிகாரிகள் சிறுவர்களின் கணக்கை ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டியது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கதிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா கூறுகையில் ‘ இரு சிறுவர்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தகவல் குறித்து அறிந்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அதிகாலை விரைவாகச் சென்று வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர்.

பணவரவு காண்பிப்பதற்கு வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என்று வங்கியின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் மட்டுமே இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் மட்டும் ரூ.900 கோடி காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version