அப்பாவின் உடல்நிலை முன்ன மாதிரி இல்ல..எஸ்.பி.பியின் மகன் சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை, முன்பு இருந்ததைவிட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ் பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, 2 நாட்களில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி விடுவேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு, அவ்வப்போது கண்விழிப்பதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக தற்போது அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக இருந்ததை காட்டிலும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் காக்கும் கருவிகள் இருந்தாலும் மூச்சு விடுவதில் முன்பு இருந்த சிரமம் குறைந்து இருப்பதாகவும், மருத்துவர்களை அவர் அடையாளம் காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகு எஸ்.பி.பியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், முழுமையாக குணமடைய ஒரு வாரத்திற்கு மேலாக ஆகலாம் எனவும், மயக்க நிலையை கடந்து அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சரண் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி எனவும், உங்களது ஆதரவு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த, எஸ்.பி.பியின் மனைவியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அந்த வீடியோவில் எஸ்.பி.பி. சரண் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version