அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கி ஒரு வழியாய்க் காதலில் விழுந்தால் மட்டும் போதுமா..அந்த அன்பை, சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்! இதோ சில குறிப்புகள்

கண்ணோடு கண் பாருங்கள்!
கவிதை போல இருக்கிறதல்லவா? மிக அவசியமான விஷயங்களில் இதுவும் ஒன்று.
கண்ணைப் பார்த்துப் பேசும்போது நம் மனம் அந்த இணைப்பை உணர்கிறது என்று சொல்கிறார்கள். செய்து தான் பாருங்களேன்
குட்டிக் குட்டி பரிசுகள்
இதற்கு அர்த்தம் பணம் செலவழிப்பதோ, யோசிக்க நேரம் எடுப்பதோ அல்ல..
அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுகள் உங்கள் அன்பை வெளிப்படுத்தும். சந்திக்கும்போது, நீங்களே போட்ட காபி, ஒரு சிறிய சாக்லேட் கூட போதுமே.
ஒன்றாக சிரிக்க நேரம் செலவிடுங்கள்
சற்று வித்தியாசமாக இருந்தாலும், இது முக்கியமானது. டி.வி. நிகழிச்சியாக இருந்தாலும், ஏதோ ஒரு வீடியோவாக இருந்தாலும், ஒன்றாகப் பார்த்து சிரிப்பது நல்ல இணக்கத்தை உண்டாக்கும். இன்டிமசி வளரும்
உங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் ஜோக்குகள், தருணங்கள் உங்களுக்குள் இருக்கும் அன்பை அதிகரிக்கும்
உங்களுக்கென்று ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள்
வாரா வாரம் ஒரே உணவகத்தில் குறிப்பிட்ட உணவு உண்பதோ, மாதத்தில் ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வருவதோ..இது போன்ற ஒரு வழக்கம் உங்களுக்கென்று ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்
இருவருக்கும் பொதுவான விஷயங்கள் இருப்பது எப்போதுமே நல்லது…ஆனால் இருவருக்கும் அது பிடித்தமான ஒன்றாக இருப்பது அவசியம்
செல்போன் வேண்டாமே!
நேரில் சந்திக்கிறீர்களா? அப்போது செல்போன் பார்ப்பதை விட்டு, உங்கள் அன்புக்குரியவருடன் பேசுங்கள். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், சமூக வலைத்தளங்கள் அப்படியே தான் இருக்கப்போகிறது
நேரில் சந்திப்பதே கடினம், அப்போதும் அவருடன் நேரம் செலவிடாமல் இருப்பது தவறு
புதிதாக ஏதேனும் தொடங்குங்கள்
நீங்கள் செலவிடும் நேரம் சுவாரஸ்யமாக இருக்க இது இன்னொரு முயற்சி. ஒரு புதிய கலையோ, அல்லது தொழில் நுட்பத்தையோ ஒன்றாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கலாம்.
இதன் மூலம், நட்பும் காதலும் அதிகரிக்கும். நீங்கள் நேரம் செலவிட நல்ல வாய்ப்பாக இருக்கும்
உங்கள் காதலன்/காதலியை முற்றிலும் புதிய சூழலில் பார்ப்பது உங்களுக்கு அவர்களைப் பற்றி தெரியாத விஷயங்களை கற்பிக்கும், நீங்கள் ஏன் முதலில் அவர்களைக் காதலித்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது என்றும் சொல்லலாம்.
பிரிவும் நல்லது தான்
ஆம். எப்போதும் எல்லாவற்றிலும் உங்கள் காதலன்/காதலியைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. தனியாகவும், அவரவர் நட்பு வட்டாரத்தோடும் கூட நேரம் செலவிடலாம்.
உங்களுக்காக நேரம் ஒதுக்குவதும், நீங்கள் விரும்புவதை செய்வதும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்
பிரிந்து இருக்கும் ஏக்கமும் சுகம் தான்..அதுவும் அவசியம் நிலையான காதல் வாழ்க்கைக்கு
மனம் திறந்து பேசுவதுண்டா?
இது சாதாரணமான காதல் பேச்சு இல்லை. நிதானமாக அமர்ந்து, அவரவர் மனதில் உள்ள எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை பகிர்வது
இந்தப் பரிமாற்றம் தான் காதல் வளர்ச்சிக்கு வித்தாகிறது.
புதிதாய்க் காதலிக்கும் போது ஏற்படும் பேச்சும், சந்திப்பும் எப்போதுமே சுவாரஸ்யம் தான். எனினும் போகப் போக அது நிலைக்க, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள, நல்ல உரையாடல்கள் அவசியம்
எல்லாவற்றையும் பயம் இல்லாமல் பகிரலாம் என்ற தைர்யம் இருவருக்குமே அவசியம்
புதிய காதல் போன்றே உணர வையுங்கள்
காதலிக்க ஆரம்பித்த நேரங்களில், அவரை இம்ப்ரெஸ் செய்ய நீங்கள் முயற்சித்த அனுபவங்கள் நினைவில் இருக்கிறதா? அதை நாளடைவில் விட்டு விடாதீர்கள்
அவருக்காக ஆசையாக சமைத்த உணவு, அவளுக்காக அணிந்த புதிய உடை இது போன்ற சின்னச் சின்ன முயற்சிகள் தான் காதலில் அழகு.
தோற்றத்தில் காதல் இல்லை என்றாலும், அந்த விஷயத்தில் எடுக்கும் சிறிய முயற்சிகளும் அவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் காதலைப் புரிய வைக்கும்