முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது தாயார் கூறியுள்ளார்.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், தமிழக அரசுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதனைதொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது பேரறிவாளனின் உடல்நிலை மோசமாக இருக்கும் காரணத்தால், அவரது பரோல் காலத்தை மேலும் 1 வாரம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேரறிவாளன் சிகிச்சைக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.