தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
டெல்லி, 2016ம் ஆண்டு தமிழக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஜூன் 28, 2016ம் ஆண்டு 2.5 முதல் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடக்க வேளான் கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசாணை வெளியிட்டது. நில அளவை வைத்து விவசாயிகளை பிரிக்க கூடாது எனவும் இது சட்டவிரோதமான அரசாணை என்பதால் அதனை ரத்து செய்ய கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 4ம் தேதி 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய புதிய அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கின் விசாரணை நீண்ட வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசுட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், அனைத்து விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் 2017ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கில் தமிழக அரசு தகுதி வாய்ந்த விவசாய்களின் பயிர் கடன் தள்ளுபடி என புதிய கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் இவ்வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கின் முந்தைய விசாரணைகளின் போது, தஞ்சை மாவட்டத்தில் 2 ஏக்கர் நிலம் வைத்து இருப்பவரும், வறட்சி பகுதியில் 5 ஏக்கர் நிலம் வைத்து இருப்பவரையும் எப்படி ஒப்பிட முடியும்? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று காலை இவ்வழக்கின் விசாரணைக்கு வந்த போது, சிறு குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு இடையே ஒரு கோடு உள்ளது நல்லது தான் என கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.