டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் காரின் சந்தா கட்டணத்தில், திடீரென மாற்றம் செய்து அறிவித்து உள்ளது.
வாடிக்கையாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடல் காருக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இரண்டாவது முறையாக இந்த காருக்கான சந்தா விலை குறைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.