ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு 23 ஆம் தேதி விசாரணை.

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு 23 ஆம் தேதி விசாரணை.


ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் அவரின் உயரதிகாரியான ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாகா கமிட்டி விசாரணை நடத்தவும், அதேபோல் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐ.ஜி. முருகனை அமைச்சர்கள் காப்பாற்ற முயல்வதாகவும், இதனால், உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தமிழகத்தில் வழக்கை விசாரிக்கக்கூடாது எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதின்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஐ.ஜி. முருகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதே விவகாரத்தில், அப்போதைய அதிமுக அரசின் சார்பில், வழக்கு விசாரணையை தமிழகத்திற்கு மாற்றக்கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 2020 மார்ச் 6 ஆம் தேதிக்குப் பிறகு இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்ததையடுத்து, கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். தமிழக அரசின் கோரிக்கையை எற்று வழக்கு வரும் 23 ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி சுபாஷ் ரெட்டி அமர்வு தெரிவித்துள்ளது.

Exit mobile version