தேவையான உணவுப் பொருட்களுடன் டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்

டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணி செல்லும் விவசாயிகள் பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி 2 நாட்கள் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன.பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நேற்றும் இன்றும் டெல்லி நோக்கி நோக்கி பேரணியாக சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கபடவில்லை. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், பஞ்சாபில் இருந்து அரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் அடைத்தனர். மேலும் பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன.

அதனை தொடர்ந்து இவர்கள் கூறியது யாதெனில் எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லி சென்று போராட்டத்தை நடத்தியே தீர வேண்டும் என்பதில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். இதற்காக பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். சாலையோரம் சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

குடும்பத்தினருடன் டெல்லியை நோக்கி பயணத்தை தொடங்கிய சில விவசாயிகள், 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தங்களின் டிராக்டர்களின் ஏற்றி வந்திருப்பதாக கூறுகின்றனர். என்ன நடந்தாலும் நாங்கள் டெல்லி செல்வோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமிர்தசரசில் இருந்து கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள், சமையல் பாத்திரங்களுடன் இன்று புறப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏராளமான விவசாயிகள், முன்னேற்பாடுகளுடன் டெல்லி நோக்கி பயணிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை கையாள்வது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்து சிறைவைப்பதற்காக, 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கு காவல்துறை அனுமதி கேட்டுள்ளது.

Exit mobile version