கிராம்பு – அழகு முதல் ஆரோக்கியம் வரை..! மருத்துவ குணங்களும்… பயன்களும்…!

இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில், முக்கிய பங்கு கிராம்பிற்கு உள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கிராம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை பல விதமான பிரச்னைக்கு தீர்வு தருகிறது. இதன் பலன்கள் அறிந்தே சர்வதேச வர்த்தகத்தில் கிராம்பின் விலையும் அதிகமாக உள்ளது. கிராம்பு தரும் பல நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

கிராம்பு ஓர் அற்புத இயற்கை கண்டிஷனர். கிராம்பில் இருந்து தயாரிக்கப்படும் கிராம்பு எண்ணெய், தலைமுடி ஆரோக்கியத்திற்குப் பெரிதாக உதவுகிறது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில், 2 சொட்டு கிராம்பு எண்ணெய்யை விட்டு, உச்சந்தலையில் நன்கு தேய்க்க வேண்டும். இதனால் தலைப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது.
ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயிலில் 3 சொட்டு கிராம்பு எண்ணெய் விட்டு முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப் பகுதி வரை நன்கு தேய்த்துவிட வேண்டும். இதனால் கூந்தல் வலுவடையும், பளபளப்பாக மின்னும்.


கிராம்பு சிறந்த வலி நிவாரணி. இதிலுள்ள ‘யூஜினால்’ என்னும் இரசாயன கலவை நரம்புகளை உணர்ச்சியற்றதாக மாற்றக்கூடிய தன்மையுடையது. தாங்க முடியாத பல் வலி உண்டாகும்போது, ஒரு சொட்டு கிராம்பு எண்ணெயை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வலி இருக்கும் இடத்தில் தடவ, சிறிது நேரத்தில் வலி குறைந்துவிடும். பற்களின் ஈறுகளில் பாக்டீரியா உருவாவதால், ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தக் கசிவு உண்டாகலாம். அதற்குக் கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வாகும்.


கிருமி நாசினி தன்மை நிறைந்த கிராம்பு . பல அழகு சாதனக் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் சேர்க்கப்படுகின்றது. கிராம்பை நன்கு பொடி செய்து தேனில் கலந்து பருக்கள் இருக்கும் இடங்களிலும், மூக்கில் மேல் உள்ள பிளாக்ஹெட்ஸிலும் தடவலாம். 15 நாட்கள் தொடர்ந்து செய்துவர முகம் பொலிவாகும், சருமம் மிருதாகும்.


கிராம்பிலுள்ள எதிர்ப்பு அழற்சி தன்மை மூச்சுப்பிடிப்பு, மூக்கடைப்பு, இருமல், தொண்டை வலி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறு பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது. வெந்நீரில் கிராம்பு போட்டு குடித்து வர உடல் எடையும் குறையும். அழகு முதல் ஆரோக்கியம் வரை பல நன்மைகள் தரும் கிராம்பை அளவாக எடுத்துக் கொள்வது நலம். எதாவது பிரச்னைக்கு கிராம்பை எடுக்க நினைத்தால் ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரையில் உட்கொள்வது சிறந்தது.

Exit mobile version