வாக்களித்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.. அரசியல் செய்யும் பாஜக.. அதிகாரத்தின் விளைவு?

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. ஆர்ஜேடி தலைமையிலான காங்கிரஸ் உள்ளடங்கிய கூட்டணி வெளியிட்ட அறிவிப்பில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழலில், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

*பீகாரில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் வளர்ச்சி அடையவில்லை. எங்கள் அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததால் இந்த வளர்ச்சி சாத்தியமானது’ என்றார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். அதைதொடர்ந்து, கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் பாஜக உடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தார். இந்த சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக ஜனநாயக கூட்டணியால் பீகார் வளர்ச்சி கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

குறிப்பாக, உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை அனைவருக்கும் கிடைக்க செய்வது அரசின் கடமையாக உள்ள நிலையில், அதனை பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களுக்கான அடிப்படையை பாஜக அரசியல் ஆக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Exit mobile version