பாமகவின் கோரிக்கை ஏற்ற அதிமுக அரசு: முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாமகவின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை பெரும்பாலான கட்சிகள், இயக்கங்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் நான்கில் ஒரு பங்கு இருக்கும் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக போராட்டம் துவங்கியது. இதனையடுத்து, இன்று பிற்பகல் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் இத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறோம் என புள்ளிவிவரங்கள் இல்லாமல் கூறி வருகின்றனர். இதனால், பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பவே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனில் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை. இந்த நிலையில் பாமகவின் இட ஒதுக்கீட்டுக்கு கோரிக்கையை ஏற்கும் வகையில் அதன், முதற்கட்ட நடவடிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கனை என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவித்த முதல்வர்,


“இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம். தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும்” என்றார்.


மேலும், “சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும். ஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். அவரின் வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றும் உறுதியளித்தார் முதல்வர்.


சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது அதிமுக அரசு.


மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென புதிய தமிழகம் உள்ளிட்ட தேவேந்திர குள வேளாளர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அதுதொடர்பாக ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அது தேர்தலுக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டதால் நாங்குநேரி இடைத் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version