எதிர்கட்சியாக இருந்த போது கருப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா ? என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் மிதமிஞ்சிய வரவேற்பு அளிப்பதும், எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதுமான செயல்பாடுகள் வெட்கக் கேடானவை. திமுக அரசு பாஜகவின் பாதம் பணிந்து சரணடைவது இழிவில்லையா?ஆரியத்தை எதிர்க்க துப்பற்று காலடியில் விழுந்து மண்டியிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என்று பிரசாரம் செய்தவர்கள் இன்று ராஷ்ட்ரீய சேவா சங்க சேய் கழகமாக செயல்படுவது கொடுமை.
#GO Back Modi என்பது வெறும் கீச்சகக்கொத்துக்குறியல்ல! தமிழர்களோடு காலங்காலமாக பகைமை பாராட்டி, வஞ்சத்தின் மூலம் தமிழ்நாட்டை அழிக்கத்துடிக்கும் ஆரிய மேலாதிக்கத்துக்கெதிரான தமிழ் தேசிய இனத்தின் அறச்சீற்றம்: முந்தைய அதிமுக அரசை அடிமையாட்சி என்று வர்ணித்துவிட்டு, இன்றைக்கு கொத்தடிமை அரசாக திமுக மாறி நிற்பது நாட்டு மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.
